மூடு

மாவட்டம் பற்றி

வரலாறு

கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்ததாலும், இப்பகுதியின் கலாச்சர மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.

பல்லவர் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து. கி.பி.900 முதல் கி.பி.1300 வரை, செங்கல்பட்டு பகுதி பிற்காலச் சோழர்களின் ஆட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியாக காணப்பட்டது. செங்கல்பட்டு பகுதியின் மற்றொரு மிக முக்கியமான வரலாற்றுக் கட்டம் விஜய நகர மன்னர்கள் ஆட்சி செய்த காலமான கி.பி.1336 முதல் கி.பி.1675 வரை உள்ள காலமாகும். 1565-ம் வருடம் நடைபெற்ற தலைக்கோட்டை போரில், விஜயநகர மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டபின் செங்கல்பட்டு நகரம் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. செங்கல்பட்டு நகரத்தில் காணப்படும் கோட்டை விஜயநகர மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். இக்கோட்டையைச் சுற்றி காணப்படும் அகழி மற்றும் ஏரி இதன் போர்காலயுத்தி அடிப்படையிலான முக்கியத்துவத்தை அதிகப்படுக்கிறது.

1751-ஆம் ஆண்டு இக்கோட்டை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 1752-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையினை மீண்டும் கைப்பற்றினார். அதன்பின்பு, இக்கோட்டை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இது திகழ்ந்தது. ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலிக்கும் இடையேயான போர்களில் இக்கோட்டை ஹைதர் அலியின் தாக்குதல்களை தாக்குபிடித்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு புகலிடமாக இருந்தது. 1900 களில் மண்பாண்டம் செய்யும் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் திகழ்ந்தது மட்டுமல்லாமல் இப்பகுதிக்கான குறிப்பாக அரிசி வியாபத்தின் சந்தை மையமாக விளங்கியது. மேலும், இம்மாவட்டம் பருத்தி, இண்டிகோ மற்றும் தோல் பதனிடுதல் ஆகிய தொழில்களின் மையமாக காணப்பட்டது. இம்மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகள் உப்பு காய்ச்சுதல் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் இருந்தது. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டங்களில் 1969-ம் ஆண்டுவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமையிடமாக செங்கல்பட்டு விளங்கியது.

புவியியல்

செங்கல்பட்டு மாவட்டம், 2945 சதுர கிலோமீட்டர் பரப்புடன் தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் சென்னை மாவட்டம், மேற்கில் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தெற்கில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 57 கிலோமீட்டர் நீள கடற்கரையை கொண்டுள்ளது. மேலும். இம்மாவட்டம் மித வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையை கொண்ட பகுதியாகும். இம்மாவட்டமானது கடற்கரை மற்றும் வெப்ப பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் பருவகால உச்ச வெப்பநிலைகளுக்கிடைய குறைந்த அளவான வீச்சு காணப்படுகிறது. ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலையாக உள்ள 25 டிகிரி செல்சியஸ் ஆண்டின் குளிர்ந்த வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 1400 மி.மீ ஆகும். இப்பகுதி வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் மற்றும் நவம்பரில் ஆண்டின் மொத்த மழையளவில் அதிகப்பங்கை பெறுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான நதிகளில் ஒன்றான பாலாறு செங்கல்பட்டு மாவட்டத்தின் வழியாக சுமார் 54 கிலோ மீட்டர் பயணிக்கிறது. மேற்கண்ட பாலாறு, பாலூர் எனும் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புகுந்து, வயலூர் மற்றும் கடலூர் கிராமங்களுக்கிடையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. மேலும் இம்மாவட்டத்தின் வடக்கில் அடையாறு ஆறும் தெற்கில் ஓங்கூர் ஆறும் பாய்கிறது. மேற்கண்ட ஆறுகள் தவிர சிறிய நதிகளான நீஞ்சல் மடுவு. புக்கத்துறை ஓடை மற்றும் கிளியாறு ஆகியவை இம்மாவட்டம் வழியாக பாய்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் (அ) 40 ஹெக்டேர் சராசரி ஆயக்கட்டு உடைய 528 பெரிய நீர்பாசன ஏரிகள் உள்ளன.

பொருளாதாரம்

விவசாயம்

இம்மாவட்டத்தின் பெருவாரியான மக்களின் தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள மாவட்டமாக இருந்தபோதிலும், விவசாயம்தான் இம்மாவட்டத்தின் முக்கிய தொழிலாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது. நெல் மாவட்டம் முழுவதும் பயிர் செய்யப்படும் முதன்மைப் பயிராக உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய வட்டங்கள் மாவட்டத்தின் முன்னனி நெல் உற்பத்திச் செய்யும் பகுதிகளாக உள்ளன. மாவட்டத்தின் சிலப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. அரசால் இயக்கப்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று மதுராந்தகம் தாலுக்காவிற்குட்பட்ட படாளம் கிராமத்தில் இயங்கி வருகிறது. மழை மற்றும் நீர்பாசனம் குறைவான இடங்களில் வேர்கடலை மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது. பணப்பயிர்களான வேர்கடலை, உளுந்து, காராமணி, சிறுபருப்பு மற்றும் எள்ளு போன்றவை செய்யூர் மற்றும் மதுராந்தகம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகின்றன. கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் திருப்போரு்ர், திருக்கழுக்குன்றம் மற்றும் மதுராந்தகம் தாலுக்காவில் பயிரிடப்படுகின்றன.
கோடைகாலங்களில் தர்பூசணி முக்கியமான பணப்பயிராக கொடு்ர், செய்யூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கருங்குழி பகுதி வெற்றிலை பயிரிடுதலுக்கு அறியப்பட்ட இடமாக உள்ளது.

தொழிற்சாலைகள்

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்களான சிறுசேரி SIPCOT தொழிற்பூங்கா இம்மாவட்டத்தில் திருப்போரு்ர் வட்டத்தில் அமைந்துள்ளது. தாம்பரத்தில் உள்ள MEPZ மெட்ராஸ் எஸ்போர்ட் பிராசசிங் சோன் தகவல் தொடர்பு தொடர்பான பல ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளடங்கிய ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்பட்டு வருகிறது. மறைமலை நகரில் உள்ள SIDCO தொழிற்பேட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் நான்கு சக்கரம் வாகனம் மற்றும் அதனைச் சார்ந்த பொருள் உற்பத்தியின் மையமாகத் திகழ்கிறது. இப்பகுதியில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதால் இதனை செங்கல்பட்டு மாவட்டத்தின் டெட்ராயிட் என்று அழைப்பது மிகையல்ல. செங்கல்பட்டு நகரை ஒட்டியுள்ள மகிந்திரா வோல்டு சிட்டி ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ளது. இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழில் நகரமாகும். இன்போசிஸ், பி.எம்.டபிள்யூ, டி.டி.கே குழுமம், கேப்ஜெமினி, ரெனால்ட் நிஸ்ஸான், விப்ரோ, டெக் மகிந்திரா ,டி.வி.எஸ். குழுமம் போன்ற முன்னனி தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டுவருகின்றன. சுமார் 25,000 க்கும் அதிகமான பணியாளர்கள் இம்மண்டலத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும், இம்மாவட்டத்தின் திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ள SIDCO தொழிற்பேட்டை மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பிரத்தியேகமான தொழிற்பேட்டையாக செயல்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தின் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் அனு ஆராய்ச்சி தொடர்பான மத்திய அரசு நிறுவனமாகும்.

போக்குவரத்து

செங்கல்பட்டு மாவட்டம் நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த முறையில் தொடர்புபடுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

சாலை போக்குவரத்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த சாலைக் கட்டமைப்புகள் மாவட்டத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களை மாவட்ட தலைநகருடன் இடர்பாடியின்றி இணைக்கிறது.

  1. NH-45 – மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, கருங்குழி, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் மற்றும் தொழுப்பேடு ஆகிய நகரங்கள் வழியாகச் சென்னை நகரத்தை மாநிலத்தின் தெற்கில் உள்ள பகுதிகளுடன் இணைக்கிறது.
  2. வெளிவட்டச்சாலையானது வண்டலூரில் ஆரம்பித்து மணிவாக்கம், திருமுடிவாக்கம் மேலும். திருவள்ளு்வர் மாவட்டத்தின் சில பகுதியான பூந்தமல்லி, திருநின்றவூர், மீஞ்சூர் மற்றும் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கிறது.
  3. கிழக்கு கடற்கரை சாலையானது சென்னை கிழக்கு பகுதிகளின் வழியாக கோவளம், வடநெம்மெலி, மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர் மற்றும் கடப்பாக்கம் வழியாக சென்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிற கடற்கரை மாவட்டங்களை இணைக்கிறது.
  4. ராஜீவ் காந்தி (அ) ஐ.டி எக்ஸ்பரஸ்வே என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையானது சென்னையின் மத்தியகைலாஷ் பகுதியை நாவலூர், கேளம்பாக்கம், திருப்போரூர் பையனூர் வழியாக மாமல்லபுரத்துடன் இணைக்கிறது.

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை, பல்லாவரம் – குன்றத்தூர் – பூந்தமல்லி சாலை, தாம்பரம் – வேளச்சேரி சாலை, தாம்பரம் – முடிச்சூர் சாலை, கூடுவாஞ்சேரி – நெல்லிகுப்பம் சாலை, ஊரப்பாக்கம் – ஆலந்தூர் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புத்தூர் சாலை, செங்கல்பட்டு – திருப்போரூர் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு – மாமல்லபுரம் சாலை, புக்கத்துரை – உத்திரமேரு்ர் சாலை, படாளம் – செய்யூர் சாலை, படாளம் – வேடந்தாங்கல் சாலை, கருங்குழி – திருக்கழுக்குன்றம் சாலை, மதுராந்தகம் – வெண்ணாங்குபட்டு சாலை, செய்யூர்- சேப்பாக்கம் – வந்தவாசி சாலை, தொழுப்பேடு – ஒரத்தி – திண்டிவனம் சாலை ஆகியன மாவட்டத்தின் பிற முக்கியச் சாலைகளாகும்.

மேற்கண்ட முக்கிய சாலைகள் தவிர, மாவட்டத்தின் பல கிராமச்சாலைகள் மாவட்டத்தின் சிறிய கிராமங்களை தாலுக்காவிற்கும். மாவட்டத்தின் தலைமையிடத்திற்கும் ஒருங்கே இணைக்கிறது.

ரயில் போக்குவரத்து

ரயில் போக்குவரத்து வசதி சிறந்த முறையில் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்றாகும். தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் இம்மாவட்டத்தின் பெரிய ரயில் நிலையங்களாகும்.
சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் ரயில்கள் இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் செங்கல்பட்டு ஜங்சன் வழியாக காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் வரை செல்கிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டேட் நிறுவனமும் ஏர்போர்ட் முதல் மாம்பாக்கம் வரை ரயில்பாதை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது. இவ்விரிவாக்கம் பல்லாவரம், குரோம்பேட்டை, MEPZ, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய நிலையங்கள் வழியாக புறநகர் பயணிகள் போக்குவரத்தை இலகுவாக்கும் வகையில் இருக்கும்.

வான்போக்குவத்து

சென்னை சர்வதேச விமான நிலையம் இம்மாவட்ட எல்லைக்குள், திரிசூலம் ரயில் நிலையத்திற்கு எதிர்த்தார்போல் உள்ளது. இவ்விமான நிலையத்தின் சரக்கு முனையம் அருகாமையில் மீனம்பாக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் தென்னிந்திய (தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கோவா மற்றும் பாண்டிச்சேரி ) தலைமையிடமாக இந்த விமான நிலையம் உள்ளது.