சமூகநலத்துறை

மாவட்ட சமூக நல அலுவலகம்
பெயர் / பதவி
தொடர்பு எண்
முகவரி
மின்னஞ்சல்
மாவட்ட சமூக நல அலுவலர்
044- 27420035
மாவட்ட சமூக நல அலுவலகம்
அறை எண் B-04, பிளாக் B, 4வது தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
செங்கல்பட்டு மாவட்டம் 603111

அண்ணன் சீர் திட்டம்

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை!
1. தகுதிகள் – யாரெல்லாம் பயன்பெறலாம்?
•திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படியான திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
•பொது விநியோக திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்பட்ட செயல்பாட்டில் உள்ள குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்
•மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
•பிற துறைகள் / வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்களை பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
•ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்யும் குடும்பங்கள், ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள், சொந்த பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், வீட்டு வருடாந்திர மின் நுகர்வு 3,600 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து), அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்/ ஓய்வூதியதாரர்கள், ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் / நிறுவனத்தினர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

2. விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?
•திருமண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
•05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
•அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

3. விண்ணப்பங்களுக்கான செயல்முறை
•விண்ணப்பதாரர் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் சமர்பித்தவுடன் மென்பொருள் அமைப்பின் மூலம் தானியங்கி முறையில் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரரின் தகுதி சரிபாக்கப்படும்.
•தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமணப் பத்திரிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
•தனித்துவ அடையாள எண்ணுடன் தகுதிபெற்ற விண்ணப்பங்கள் குறித்த செய்தி பயனாளிகளுக்கு, அவர்களால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS), புலனம் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கப்படும்.
•மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருமண நடைபெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் திருமணத்தை தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.
•தகுதியின்மை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.
•தன் விண்ணப்பம் தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்று விண்ணப்பதாரர் கருதினால், இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் வசதி மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
•மேல்முறையீடு செய்யும் விண்ணப்பங்கள் குறித்து கள விசாரணை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர் தகுதியானவராக இருப்பின் மேற்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பலன்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

4. அண்ணன் சீர் திட்டத்தின் பயன்
தகுதியுடைய திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும்.

 

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண் கல்வியினை ஊக்கப்படுத்துதல் போன்ற பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் விவரம்

திட்டம் – 1
குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து வைப்பு தொகை இரசீது பெற்றோரிடம் வழங்கப்படும்.
திட்டம் – 2
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து வைப்பு தொகை இரசீது பெற்றோரிடம் வழங்கப்படும்.

தகுதிகள்

1. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2. 49 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
3. குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
4. ஆண் குழந்தை இருக்க கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கக்கொள்ளவும் கூடாது.
5. விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
6. திட்டம் -1 – பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
7. திட்டம் -2 – இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்று (மாநகராட்சி, வட்டாச்சியர் அலுவலகம், நகராட்சியர் அலுவலகம்)
2.பெற்றோரின் வயது சான்று (பிறப்புச் சான்று, பள்ளிச்சான்று அல்லது அரசு மருத்துவரின் சான்று)
3.குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்மந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)
4.வருமான சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
5.ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
6.பிறப்பிடச் சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)

திருமண நிதி உதவி திட்டங்கள்

ஏழை விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோருக்கு உதவிடும் வகையில், கீழ்கண்டுள்ளவாறு தமிழக அரசால் நான்கு வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவி திட்டம்

திட்டத்தின் பெயர் (ம) விவரம்

திட்டம் – 1
1.கல்வித் தகுதி இல்லை
2.ரூ.25,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம். (ரூ.15,000/- தொகையும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)

திட்டம் – 2
1.பட்டம் (அ) பட்டயம் முடித்து தேர்ச்சி பெற்றவர்கள்
2.ரூ.50,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம். (ரூ.30,000/- தொகையும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)

தகுதிகள்

1.வருமான வரம்பு ஏதும் இல்லை
2.மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
3.மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.மணமகனுக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
5.திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
6.திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.விதவைச் சான்று
2.மறுமணம் செய்வதற்கான திருமண அழைப்பிதழ்
3.மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று
4.மணமகனுக்கு இது முதல் திருமணம் என்பதற்கான சான்று
5.மணமகள் கல்வி தகுதி சான்றிதழ்
6.இருப்பிட சான்றிதழ்
7.குடும்ப அட்டை
8.மணமகள் மற்றும் மணமகன் ஆதார்.
9.திருமண அழைப்பிதழ்

ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம்

திட்டத்தின் பெயர் (ம) விவரம்

திட்டம் – 1
1.கல்வித் தகுதி இல்லை
2.ரூ.25,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம்.

திட்டம் – 2
1.பட்டம் (அ) பட்டயம் முடித்து தேர்ச்சி பெற்றவர்கள்
2.ரூ.50,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம்.

தகுதிகள்

1.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2.விதவை தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3.திருமணத் தேதியன்று மணமகள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
4.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.வருமாண சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
2.சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சான்று தேவையில்லை.
3.விதவை உதவித் தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச் சான்று வட்டாச்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்க வேண்டும்.
4.விதவையர் மகளின் வயது சான்றிதழ்.
5.விதவையர் மகளின் கல்வி தகுதி சான்றிதழ்
6.இருப்பிட சான்றிதழ்
7.குடும்ப அட்டை
8.விதவை தாய், மணமகள் மற்றும் மணமகன் ஆதார்
9.திருமண அழைப்பிதழ்

 

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

திட்டத்தின் பெயர் (ம) விவரம்

திட்டம் – 1
1.கல்வித் தகுதி இல்லை
2.ரூ.25,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம்.

திட்டம் – 2
1.பட்டம் (அ) பட்டயம் முடித்து தேர்ச்சி பெற்றவர்கள்
2.ரூ.50,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம்.

தகுதிகள்

1.ஆதரவற்ற பெண்கள்.
2.வருமான வரம்பு ஏதும் இல்லை.
3.திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை
4.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.தாய், தந்தை இறப்புச் சான்று (அல்லது) சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவற்றோர் என்பதற்கான பரிந்துரை கடிதம்.
2.மணமகள் வயதுச் சான்று
3.மணமகள் கல்வித் தகுதி சான்று
4.இருப்பிட சான்றிதழ்
5.குடும்ப அட்டை
6.மணமகள் மற்றும் மணமகன் ஆதார்
7.திருமண அழைப்பிதழ்

 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்

திட்டத்தின் பெயர் (ம) விவரம்

திட்டம் – 1
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2.ரூ.25,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம். (ரூ.15,000/- தொகையும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)

திட்டம் – 2
1.பட்டம் (அ) பட்டயம் முடித்து தேர்ச்சி பெற்றவர்கள்
2.ரூ.50,000/- மற்றும் 8 கிராம் (22 கிராட்) தங்க நாணயம். (ரூ.30,000/- தொகையும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)

தகுதிகள்

1.பிரிவு-1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருத்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.
2.பிரிவு-2 -புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருத்தால் நிதியுதவி வழங்கப்படும்.
3.தம்பதியர் இருவரும் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்
4.வருமான வரம்பு ஏதும் இல்லை
5.திருமணத் தேதியன்று மணமகளின் வயது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
6.திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை
7.திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.திருமண பதிவுச் சான்று
2.கலப்பு திருமணச் சான்று
(வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
3.மணமகன் மற்றும் மணமகளின் சாதிச் சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
4.மணமக்களின் வயதுச் சான்று
5.மணமக்களின் கல்வி தகுதி சான்று
6.மணமக்களின் பிறப்பிட சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
7.மணமக்களின் ஆதார்
8.குடும்ப அட்டை
9.திருமண அழைப்பிதழ்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பெயர்

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

தகுதிகள்

1.ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள்.
2.அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் குறைந்தது 6 மாத கால தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்.
3.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
5.உரிய சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

இணைக்க வேண்டிய சான்றுகள்

1.ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் / விதவை என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெறப்பட்டது)
2.குடும்ப வருமானச் சான்று
3.வயதுச் சான்று
4.விண்ணதாரர் தையல் தைக்க தெரிந்தவர் என்பதற்கான 6 மாத பயிற்சி பெற்ற சான்று
5.சாதிச் சான்று
6.குடும்ப அட்டை
7.ஆதார்

புதுமைப்பெண் திட்டம்

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டமானது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் –  புதுமைப்பெண் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு 05.09.2022 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு  30.12.2024 அன்று 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் “புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்” செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், அவர்கள் உயர்கல்வி பயிலும் வரையிலும் மாதந்தோறும் ரூ.1,000/- அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

தமிழ்ப்புதல்வன் திட்டம்

புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை போன்று, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், 09.08.2024 அன்று 2024-2025  கல்வியாண்டு முதல் ”தமிழ்ப் புதல்வன்” செயல்படுத்தப்பட்டது.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்

1.புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் (தமிழ் வழியில்) பயின்று தமிழகத்தில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் உயர்கல்வியில் சேர்ந்திருக்க வேண்டும்.
2.இளங்கலை பட்டம் / பட்டய படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000/- உயர்கல்வி ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துப்படும்.
3.8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
4.வேறு திட்டங்களின் கீழ் Scholarship பெறும் மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
5.தொலை தூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற இயலாது

குழந்தை திருமண தடுப்பு சட்டம் – 2006

18 வயது நிறைவடையாத பெண்ணிற்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
சட்டத்தால் அளிக்கப்படும் பாதுகாப்பு விவரம்
•ஏற்கனவே நடைபெற்ற குழந்தை திருமணத்தை செல்லாததாக்குதல்.
•பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பராமரிப்பு, மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்கிறது.
•குழந்தை திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்குதல், மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது.
•குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மறுவாழ்விற்கு உறுதுணை செய்கிறது.

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனை விவரங்கள்.
•குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை சென்றவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவருக்கு 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
•குழந்தை திருமணத்தை தடுக்க தவறிய பெற்றோர், பாதுகாவலர் மற்றும் அத்திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
•18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கும் 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
•குழந்தை திருமணத்தில் ஈடுபடும் செயலானது பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய (Congizable) மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத (Non-Bailable) குற்றமாகும்.

குடும்ப வன்முறை சட்டம் 2005

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005 (The Protection of Women from Domestic Violence Act, 2005) என்பது குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக, அவர்களது இரத்த பந்தங்களாலும், திருமண உறவுகளாலும் வன்முறை ஏற்படுவதை உணர்ந்து, அவ்வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டமாகும்.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
•குடும்ப வன்முறை வரையறை: உடல் ரீதியான துன்புறுத்தல் மட்டுமல்லாமல், வாய்மொழி மற்றும் உணர்வு ரீதியான அவமதிப்புகள், பாலியல் தொல்லைகள் மற்றும் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகள் ஆகியவையும் வன்முறையாக வரையறுக்கப்பட்டுள்ளன.
•இருப்பிட உரிமை: ஒரு பெண் தான் வசிக்கும் கூட்டுக் குடும்பம் அல்லது பகிர்ந்துக்கொள்ளப்பட்ட வீட்டில் தொடர்ந்து வாழ்வதற்கான உரிமையை இச்சட்டம் உறுதி செய்கிறது. அவளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது.
•உடனடி நிவாரணம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மூலமாக 60 நாட்களுக்குள் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகள்
•பாதுகாப்பு ஆணை (Protection Order): வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் நீதிமன்ற ஆணை.
•வசிப்பிட ஆணை (Residence Order): பகிர்ந்துக்கொள்ளப்பட்ட வீட்டில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்குதல் அல்லது மாற்று இட வசதி செய்து தருதல்.
•பொருளாதார உதவி (Monetary Relief): மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பராமரிப்புத் தொகை மற்றும் பொருளாதாரம், உடல் மன ரீதியான வன்முறைக்கு இழப்பீடு வழங்குதல்.
•குழந்தைகள் காவல் (Child Custody): எதிர்மனுதாரரிடமிருந்து குழந்தைகளைப் பெற்று மனுதாரரிடம் ஒப்படைக்க நீதிமன்ற ஆணை வழங்குதல்.
•சீதன பொருட்கள் திரும்ப பெற ஆணை(Return of Stridan Arcticles): மனுதாரருக்கு திருமணத்தின் போது மற்றும் அதன்பிறகும் சீதனமாக கொடுத்தவற்றை திரும்ப கோரி பெறும் உரிமை.

புகார் அளிப்பதற்கான வழிகள்:
•மாவட்டப் பாதுகாப்பு அலுவலர் (Protection Officer – PO) மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இவரை நேரில் அணுகி விவரங்களைக் கூறலாம். அவர் Domestic Incident Report – DIR என்ற படிவத்தைத் தயார் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக இலவசமாக நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வார்.

•நேரடியாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) மனு தாக்கல் செய்தல் – காவல் நிலையத்திற்கோ அல்லது பாதுகாப்பு அலுவலரிடமோ செல்ல விரும்பாதவர்கள், ஒரு வழக்கறிஞர் (Advocate) மூலமாக சட்டம் பிரிவு 12-இன் கீழ் நேரடியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.சட்ட உதவி பெற வசதி இல்லாத பெண்களுக்கு, அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ‘இலவச சட்ட உதவி மையம்’ (Free Legal Aid Cell) மூலம் இலவச வழக்கறிஞர் உதவி வழங்கப்படும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961

திருமண வாழ்வில் பொருளாதார வன்முறை, கட்டாய சீதனம் போன்ற கோரிக்கைகளால் ஏற்படும் வன்முறை, உயிரிழப்பு போன்ற துன்பங்களிலிருந்து பெண்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது வரதட்சனை தடுப்பு சட்டம் 1961 ஆகும்.
 
வரதட்சனை என்பது
வரதட்சனை என்பது திருமணத்திற்காக மணமகன் வீட்டாரால் சொத்து அல்லது மதிப்புமிக்க பொருள் அல்லது வைப்புகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகள் வீட்டாரிடமிருந்து வற்புறுத்தி பெறப்படுவது அல்லது கொடுக்க வற்புறுத்துவது ஆகும். வரதட்சணை கோரிக்கைக்காக மணமகளையோ அல்லது மனைவியையோ அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களையோ கட்டாயப்படுத்துவது, தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது மிரட்டுதல் போன்ற செயல்கள் வரதட்சணை தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
 
செல்லத்தகாத ஒப்பந்தம்
வரதட்சணை பெறுதற்கோ அல்லது கொடுப்பதற்கோ எத்தரப்பும் ஏற்படுத்தும் எவ்விதமான ஒப்பந்தமும் செல்லாததாகும்.
 
எங்கு புகார் அளிக்கலாம்?
வரதட்சணை தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது காவல்துறையிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நலவாரியத்திடமோ புகார் மனுக்களை அளிக்கலாம்.
 
தண்டனை
•வரதட்சணை கொடுப்தோ, வாங்குவதோ போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனையோ, அதனுடன் அபராதமாக ரூ.15,000/- அல்லது வரதட்சணையாகக் கோரி பெற்ற சீதனத்தின் மதிப்பு இவற்றில் எது அதிகமோ அத்தொகை அபராதம் ஆகும்.
 
•மணமகள் அல்லது அவர் தன் பெற்றோரிடமோ, உறவினரிடமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்டால் 2 வருட சிறை தண்டனையுடன் அபராதமாக ரூ.10,000/- செலுத்த வேண்டும்.
 
முதியோர் நலன்

தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்ட விதிகள் 2009.
மூத்த குடிமக்களின் நலன் காக்கவும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை பராமரிப்பதற்காகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உத்திரவாதமும், அங்கீகாரமும் அளித்து உறுதி செய்யப்பட்டுள்ளவாறு, சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கக்கூடிய பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-ஐ தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகள், 2009 இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் சிறப்பு கூறுகள் பின்வருமாறு-

•இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு தொகை கோரி பெறப்படும் மனுக்கள் 90 நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும்.

•பராமரிப்புத் தொகையாக அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ.10,000/- வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது (விதி எண்.15)

•மூத்த குடிமக்களின் பாதுகாப்பான பராமரிப்பிற்கு பொறுப்பான நபர், முதியவர்களை நிராதரவாக விட்டுச் சென்றால், அந்நபருக்கு 3 மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000/- வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும்.

முதியோருக்கான குறை களைவு வழிமுறைகள்-

•மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் குறை களைவு மனுக்களை விரைந்து தீர்வு செய்ய ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் சார்ஆட்சியர் / வருவாய் கோட்டாச்சியரை தலைவராகக் கொண்ட உட்கோட்ட தீர்ப்பாயம் (Maintenance Tribunal) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
•தீர்பாயத்தின் ஆணைக்கெதிராக மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவரைத் தலைவராகக் கொண்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Appellate Tribunal) அமைக்கப்பட்டுள்ளது.
•மாவட்ட சமூக நல அலுவலர்கள் இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு அலுவலர்களாகவும், சமரச அலுவலர்களாகவும் செயல்படுகின்றனர்.

 

மூத்த குடிமக்களுக்கு உதவும் சட்டங்கள் குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மூத்த குடிமக்கள் என்றால் யார்?
•60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் – மூத்த குடிமக்கள்
•பெற்றோர் – வயது வரம்பு இல்லாமல் (தந்தை / தாய்)
•மூத்த குடிமக்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொத்திலிருந்து வெளியேற்ற முடியுமா?
ஆம். பெற்றோருக்குச் சொத்து சொந்தமாக இருந்தால், 2007 சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் கீழ் துஷ்பிரயோகம் செய்யும் அல்லது புறக்கணிக்கும் குழந்தைகளை வெளியேற்ற அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

ஒரு தீர்ப்பாயம் உத்தரவிடக்கூடிய அதிகபட்ச பராமரிப்பு தொகை என்ன?
தீர்ப்பாயங்கள் மாதத்திற்கு ₹10,000 வரை உத்தரவிடலாம், இருப்பினும் நீதிமன்றங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து இதை நெகிழ்வாக விளக்கலாம்.

மூத்த குடிமக்கள் மகள்களிடமிருந்தும் பராமரிப்பு கோர முடியுமா?
ஆம். மகன்கள் மற்றும் மகள்கள் இருவரும் சமமாக பொறுப்புள்ளவர்கள்.

ஒரு மூத்த குடிமகன் சொத்துக்களை மாற்றிய பிறகும், இப்போது புறக்கணிக்கப்பட்டால் என்ன செய்வது?
இந்த சொத்து பரிமாற்றம் செல்லாது (விதிமுறைகளுக்குட்பட்டு) என்று அறிவிக்கப்பட்டு, உரிமையை மூத்த குடிமகனுக்கு மீட்டெடுக்கலாம்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம்) 2013

சட்டத்தின் நோக்கம்
இந்திய அரசியல் சாசனச் சட்டத்திலும் பெண்களுக்கான பிற பாதுகாப்பு சட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று, பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு குறிப்பாக பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழலை உறுதிப்படும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
 
விசாகா (எதிர்) இராஜஸ்தான் மாநிலம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013ல் உருவானது.
 
பாலியல் துன்புறுத்தல்
பாலியல் துன்புறுத்தல் என்பது உடல்ரீதியான தொடர்பு மற்றும் முயற்சிகள், பாலியல் தொடர்பான செயல்பாடு அல்லது வேண்டுமேன்றே பாலியல் அர்த்தமுள்ள கருத்துக்களை கூறுவது, ஆபாச படம் காட்டுவது உள்ளிடவை ஆகும்.
 
பாலியல் துன்புற்ற பெண்
ஒரு பணியிடத்தை பொறுத்தவரையில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் செயலுக்கும் உள்ளாக்கப்பட்டதாகப் புகார் அளிக்கும் எந்த வயது பெண்ணானாலும் அவர் பாலியல் துன்புற்ற பெண்ணாக கருதப்படுவார்.
 
பாலியல் சம்மந்தப்பட்ட கீழ்க்காணும் பிரச்சணைகளை சந்திக்கும் பெண்கள் இச்சட்டத்தின் கீழ் அந்தந்த பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள (Internal Committee) உள்ளக புகார் குழு-வில் புகார் செய்யலாம்.
1.உடலை தொடுதல்
2.ஆபாசம் கலந்த ஜாடமாடையான பேச்சு
3.ஆபாச படங்களை காட்டுதல்
4.பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தல்
”உள்ளக புகார் குழு” அமைத்தல்
பத்து தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்துப் பணியிடங்களிலும் வேலையளிப்போர் ஒவ்வொருவரும் எழுத்துப்பூர்வமான ஒரு ஆணையின் மூலம், உள்ளக புகார் குழு என்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு மேற்படி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்.
 
”உள்ளுர் புகார் குழு
பத்து தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களில் “உள்ளக புகார் குழு” அமைக்கப்படாத நிலையில் நிறுவனங்களிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெறுவதற்காக மாவட்ட அளவில் “உள்ளுர் புகார் குழு” அமைக்கப்பட்டுள்ளது.
 
புகார் கொடுதல் மற்றும் விசாரணை முறை
•சம்பவம் நடந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். தொடர் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் கடைசி சம்பவம் நடந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும்.
•90 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2014

தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன் கீழ் பணிபுரியும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் மற்றும் உறைவிடங்கள்  ஆகியவற்றை பதிவு செய்து உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உரிமம் பெறாமல் செயல்படும் விடுதிகளின் உரிமையாளர்களின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 20 உட்பிரிவு 1-ன்படி 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 50,000/- அபராதம் விதிக்கப்படும்.

சகி – ஒருங்கிணைந்த சேவை மையம்

திட்டத்தின் நோக்கம்:
ஒருங்கிணைந்த சேவை மையம் குடும்பம், பணிபுரியும் இடம், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1.ஒருங்கிணைந்த சேவை மையம் 181 என்ற மகளிர் உதவி எண் மற்றும் பிற உதவி எண்ணுடன் இணைந்து 24 மணி நேர சேவை வழங்குகிறது.
2.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை, சட்ட உதவி ஆலோசனை, மருத்துவ உதவி, காவல்துறை உதவி மற்றும் உறைவிடம் போன்ற சிறப்பு சேவைகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்குறிப்பிட்டுள்ள இரண்டு இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

வ. எண் ஒருங்கிணைந்த சேவை மையம் முகவரி
1 செங்கல்பட்டு          செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்டம்.
2 பெரும்பாக்கம்

கட்டிட எண் 92, தரை தளம்,

தமிழ்நாடு நகர்ப்புற குடிசை மாற்று வாரியம்,

பெரும்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

 

தோழி – அரசு பணிபுரியும் மகளிர் விடுதி

பணித்திறனில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில், குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இருப்பது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்திவருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” என்ற அமைப்பை அமைத்துள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை “ தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

வ. எண் அரசு பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடம் படுக்கை வசதி எண்ணிக்கை
1

தோழி – பணிபுரியும் மகளிர் விடுதி – நந்திவரம் கூடுவாஞ்சேரி

எண்.6, 4 வது, தெரு, டிபென்ஸ் காலனி, நெல்லிக்குப்பம் ரோடு, (சார் பதிவாளர் அலுவலகம் அருகில்) நந்திவரம், கூடுவாஞ்சேரி 603202

120
2

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி –தாம்பரம் சானடோரியம்

எண்.08, நிர்மலா கார்டன் ஹோம் ரோடு. ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானடோரியம், செங்கல்பட்டு மாவட்டம்- 600047

473
3

தோழி- பணிபுரியும் மகளிர் விடுதி – புனிததோமையார் மலை

எண்.07, கிண்டி-பூந்தமல்லி ரோடு,

புனிததோமையார்மலை,

செங்கல்பட்டு மாவட்டம் – 600089

145

தோழி விடுதிகள் குறித்து மேலும் விவரங்களை https://www.tnwwhcl.in/ என்கிற இணையதள பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்

தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நல வாரியத்தினை 15.04.2008 அன்று துவக்கி திருநங்கைகளின் குறைகளை களைந்து வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அளிப்பதுடன், அவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் சமூக பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு சமுதாயத்தில் உரிய அடையாளம் வழங்கியுள்ளது.
திருநங்கைகள் நலக்கொள்கை என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடாகும்.
திருனர்களுக்கு (திருநங்கை / திருநம்பி) அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை மிகுந்த அக்கறையுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
1.திருநங்கைகள் – Mobile App மூலம் விண்ணப்பிக்கும் திருநங்கைகளுக்கு ஆதார் எண்ணினை மட்டுமே ஆதரமாக கொண்டு திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
2.40 வயதை கடந்த ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1500/- வழங்கப்படுகிறது.
3.திருநங்கைகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்குவிக்கும் விதமாக, பட்டம் மற்றும் பட்டய படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் பயிலும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவினங்களையும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கிட அனுமதி அளித்து அரசாணை வெளியடப்பட்டுள்ளது.
4.திருநங்கைகள் உயர்கல்வியில் பயிலுவதற்கு ஏதுவாக அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் திருநங்கைகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க தற்போதுள்ள வயது உச்ச வரம்பினை 5 ஆண்டுகள் தளர்வு செய்து அரசாணை வெளியடப்பட்டுள்ளது.
5.மேலும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில், திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. (தனியார் பள்ளியில் படித்திருக்கலாம்).
6.”சிறந்த திருநங்கையர் விருது” 2019ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறந்த சேவை செய்து, அவர்களது பணியினை தனது சொந்த முயற்சியின் மூலம் கட்டமைக்க உதவிய திருநங்கையருக்கு ரூ.1.00 லட்சம் மற்றும் பாராட்டு சான்றுடன் இவ்விருது வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் நாள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
7.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டையினை பெற குடும்ப அட்டை மற்றும் வருமனை சான்று சமர்பிப்பதில் இருந்து திருநங்கைகளுக்கு விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
8.அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
9.திருநங்கையர் குடும்ப தலைவராக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ”மகளிர் உரிமைத் தொகை” வழங்கப்படுகிறது.
10.2025-26 ஆம் நிதியாண்டில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தினை சேர்ந்த திருநங்கையரில் ஊர்காவல் படையில் சேர விருப்பம் மற்றும் தகுதியுள்ள 50 திருநங்கையரை முதற்கட்டமாக சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகரங்களில் ஊர் காவல் படையில் பணியமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
11.ஊர்க்காவல் படைக்காக தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைகளுக்கான கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையில் பணியாற்றும் திருநங்கைகளுக்கான ஒரு மாதத்திற்கான அழைப்பாணை 20 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
12.திருநங்கை / திருநம்பி / இடைபாலினருக்கு சுயத்தொழில் துவங்குவதற்கு திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய மானியத்தொகை பெற்று வழங்கப்படும்.

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்

நோக்கம்
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காகவும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியமானது 02.09.2022 அன்று உருவாக்கப்பட்டது.
 
உறுப்பினர் பதிவு
•கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலைப் பயன்பாடு (Web Application) வாயிலாக தங்கள் விவரங்களை அளித்து இவ்வாரியத்தில் உறுப்பினராவதற்கு பதிவு செய்யலாம்.
•பதிவு செய்த உறுப்பினர்கள், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளான சமூக நலத்துறையின் திட்டங்கள், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் போன்ற இன்னபிற உதவிகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
சுய தொழில் புரிய விரும்புவர்களுக்கு உதவி
•சுய தொழில் புரிய விருப்பம் தெரிவிக்கும் வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அரசின் பிற துறைகளான, மாவட்ட தொழில் மையம் (DIC), தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் (TAMCO), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW), தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றின் சுய தொழில் திட்டங்களின் மூலம் சுய தொழில் புரிய மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
•இத்திட்டத்தின் கீழ் மேற்படி துறைகளில் சுயத்தொழில் திட்டங்களின் கீழ் வங்கிக் கடன் பெறும் இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு அவர்களின் தனி நபர் பங்களிப்பு தொகையினை (Seed Money) இவ்வாரிய நிதியிலிருந்து ரூ.50,000/- வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 
திறன் பயிற்சி வழங்குதல்
•தமிழ்நாடு கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் வலைப் பயன்பாட்டில் திறன் பயிற்சி பெற விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு, மாவட்ட சமூக நல  அலுவலர் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக திறன் பயிற்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
•மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ”Naan Mudhalvan Finishing School”- ”வெற்றி நிச்சயம்” திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் சமூக நலத் துறையின் வாயிலாக கைம்பெண்கள், நலிவுற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர், பேரிளம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
•இத்திறன் பயிற்சியினை முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் ஊக்கத் தொகையுடன், சுயத்தொழில் புரிய அல்லது தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அழகு நிலையங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படுகின்றது.
 
சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திட்டங்களில் முன்னுரிமை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்டங்களான விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், உலர் / ஈர மாவு அரவை இயந்திரம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் (அதிகப்பட்சம் ரூ.5,000/- மட்டும் மானியமாக வழங்கப்படும்) மற்றும் இன்னபிற திட்டங்களில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.